Thursday, 4 October 2012

ரவுசு பலன்

மேஷம்:
      ரேஷன் கல்லில் ரோஷம் காட்டும் மேஷ ராசி நண்பர்களே..உங்களை சனி சைட் அடிப்பதால் சரக்கடிப்பதை நிறுத்தவும்.ராகு கேதுவோடு இருப்பதால் நீங்கள் மனைவியிடம் சாதுவாக இருப்பது நல்லது.இல்லையென்றால் சேதுவாக மாறுவீர்கள்.அலுவலக ஆணிகள் அதிகரிக்கும்.பக்கத்துக்கு வீட்டு பதுமைகள் பல்லிளிக்கும்.தினமும் நாலு பிச்சைகாரர்களுக்கு பிஸ்ஸா கொடுக்க வேண்டும்.மாசத்தில் ஒருமுறை குடும்பத்துடன் வெளியூர் செல்ல விசா எடுக்க வேண்டும்.உங்களுக்கு உகந்த நிறம் சிவப்பு.உறவிடம் காட்ட கூடாது கடுப்பு.

ரிஷபம்:
      ரிஸ்க் எடுப்பதில் ரஸ்க் சாப்பிடும் ரிஷப ராசி நண்பர்களே....உங்களை குரு குறுகுறுன்னு பார்ப்பதால்,நீங்கள் துறுதுறுன்னு செயல்பட வேண்டும்.சுக்கிரன் உச்சத்தில் இருந்தாலும்,தங்கள் மனைவி உக்கிரத்தில் இருப்பதால் நீங்கள் கொஞ்சம் தூரத்தில் இருப்பது நல்லது.தினமும் நாலு நாய்க்கு நாஷ்டா வாங்கி தரவும்.பாவபட்டவர்களுக்கு பாஸ்தா வாங்கி தரவும்.உங்களுக்கு உகந்த நிறம் பச்சை.அடக்க வேண்டும் உங்கள் பேச்சை.

மிதுனம்:
     ஆதினத்தை புனிதமாய் கருதும் மிதுன ராசி நண்பர்களே....உங்களை சனி சகட்டுமேனிக்கு சாடுவதால் சாமியார்களை நாடுவதை நிறுத்தவும்.ராகுவும்,கேதுவும் தூங்குவதால் இறையாண்மை தங்கள் அறியாமையை எழுப்பிவிடும்.தங்கள் மூளையை மழுப்பிவிடும்.காவி உடையை நம்பி காக்கி சட்டையிடம் அகப்படாதீர்.தினமும் நாலு ஏழைக்கு எள்ளுருண்டை வாங்கி தரவும்.உங்களுக்கு உகந்த நிறம் கருப்பு.உங்கள் உயர்வுக்கு கை கொடுக்கும் உங்கள் உழைப்பு.

சிம்மம்:
     சிங்கள் டீக்கு சிங்கி அடிக்கும் சிம்ம ராசி நண்பர்களே....உங்களில் குரு இடம் மாறுவதால் நீங்கள் தடுமாறுவது சகஜம்.ஆனால் சனி குணம் மாறுவதால்,தாங்கள் தடம் மாறமாட்டீர்கள்,இது நிஜம்.சுக்கிரன் சுத்த விடுவதால் அலைச்சலுக்கு ஆளாவீர்.கடன்காரர்களை சுத்த விடுவதால் அவர்கள் எரிச்சலுக்கும் ஆளாவீர்.தினமும் நாலு பட்டதாரிக்கு பஸ் டிக்கெட் எடு.உங்களுக்கு உகந்த நிறம் மஞ்சள்.உங்களை தேடிவரும் வேலைக்கான அஞ்சல்.

கன்னி:
     கன்னிகள் கழுவி ஊத்தும் கன்னி ராசி நண்பர்களே...உங்களை சனி குனிந்து பார்ப்பதால் நீங்கள் பெண்களை நிமிர்ந்து பார்க்க வேண்டும்.ராகுவை தொடர்ந்து கேதுவும் விலகுவதால் நீங்கள் மாதுவை தொடர்ந்து மதுவிடமும் விலக வேண்டும்.குரு குழப்பமாக உள்ளதால் குத்து விளக்கையும்,குடும்ப விளக்கையும் எண்ணி குடை சாய்வீர்.மண்டை காய்வீர்.தினமும் நாலு பெண்களை தங்கச்சி என அழைக்கவும்.உங்களுக்கு உகந்த நிறம் நீலம்.உனக்கான தேவதை உன்னை தேடி வரும் காலம்.

கடகம்:
      கலகத்தில் பல்கலைக்கழகமான கடக ராசி நண்பர்களே...உங்களை ராகுவும்,கேதுவும் எட்டி பார்ப்பதால் இனி யாரிடமும் கோல்மூட்டி பார்க்க கூடாது.சனி குருவுக்கு குடைச்சல் கொடுப்பதால் தங்கள் பணி(செயல்) பிறருக்கு எரிச்சலை கொடுக்கும்.வீட்டுக்குள் விவாதம் வரும்.கோர்ட்டுக்குள் விவாகரத்து ஆகும்.ஆகையால் கலகத்தை விடுவீர்.கடமையில் ஈடுபடுவீர்.தினமும் நாலு முறை வானத்தை போல படம் பார்க்கவும்.உங்களுக்கு உகந்த நிறம் வெள்ளை.கலகமூட்டினால் வரும் தொல்லை.

துலாம்:
       கலாமினால் கனவு காணும் துலாம் ராசி நண்பர்களே...உங்களை சனி ஓட ஓட விரட்டுவதால்,வெற்றி தன்னை மேலும் தேட வைக்கிறது.உங்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லையெனினும் குருவுக்கு குளிர் காய்ச்சால் என்பதால் உங்களுக்கு ஜலதோஷம் உண்டு.ஒரு பொழப்பும் இல்லையெனினும் வேலைக்காக நாயாய் அலைவதால் நாய் பொழப்பு உண்டு.தினமும் நாலு முறை சூரியவம்சம் பாட்டை(நட்சத்திர ஜன்னலில்) கேளு.உகந்த நிறம் ஊதா.உழைக்காவிட்டால் நீ சோதா.

விருச்சிகம்:
        வீரு கொண்டு வீண்வாதம் செய்யும் விருச்சிக நண்பர்களே...உங்களை குரு குஷியாக பார்ப்பதால் நீங்கள் குருமாவை ருசியாக சுவைக்கலாம்.ராகு,கேது பின்னி பிணைந்திருப்பதால் நீங்கள் தண்ணியும்(சரக்கும்),தண்ணியும் கலந்துருப்பீர்கள்.உங்களை சனி நெருங்குவதால் வராத மழையிலும் விடாது குடை பிடிப்பதை போல்,இல்லாத பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணும் பந்தாவை  நிறுத்தவும்.தினமும் நான்கு வேலையும் மௌனவிரதம் இருக்கவும்.உகந்த நிறம் ரோஸ்.ஒழுங்காய் வாழ்ந்தால் பாஸ்.

தனுசு:
        தினுசாய் திரியும் தனுஷ ராசி நண்பர்களே...உங்களோடு சனி சரக்கடிப்பதால் இனியோடு பிறரை நோகடிப்பதை நிறுத்தவும்.ராகுவும்,கேதுவும் இரு வேறு திசையில் செல்வதால் உங்களுக்கு பல்வேறு இம்சைகள் வந்துசேரும்.அறிவிப்பின்றி அறிக்கை விட்டு,ஆதரவின்றி அடிவாங்கி வருவீர்.தினமும் நான்கு முறை அன்னா ஹசாரே பற்றிய செய்திகளை படிக்கவும்.உகந்த நிறம் வெள்ளை.பிறரை குற்றம் கண்டால் உன் கண் நொல்லை.

மகரம்:
        தகரத்தை தங்கமாக்க நினைக்கும் மடப்பய மகர ராசி நண்பர்களே...உங்களை சனி சைடுல இருந்து பார்ப்பதால் உங்கள் வீட்டில் ரெய்ட் வர வாய்ப்புண்டு.ராகுவும்,கேதுவும் சண்டை போடுவதால் மதுவும்,மாதுவும் உங்களை போடும்.குரு குனிந்ததால் தங்கள் நம்பிக்கை படுக்க நேரிடும்.தினமும் நான்கு முறை டி.ஆர் பாடல்கள் கேளுங்கள்.உகந்த நிறம் கருப்பு.உழைப்பால் உயர்வதே சிறப்பு.

கும்பம்:
       கும்பலிலே கும்மி அடிக்கும் கும்ப ராசி நேயர்களே...உங்களை ராகு,கேது கோபத்தோடு பார்ப்பதால் பிறர் உங்களை பரிதாபத்தோடு பார்க்க வேண்டிய நிலை வரும்.குரு குரூப்போட சுத்துனாலும்,சனி தனியா வந்து கட்டம் கட்டுவதால் நீங்கள் சோலோவாய் சோக கீதம் பாட வேண்டி வரும்.தினமும் நான்கு முறை மோகன் பாடல்கள் கேளுங்கள்.உகந்த நிறம் அஞ்சல்.தனித்து வாழ பயந்தால் வாழ்வு அந்தரத்தில் ஊஞ்சல்.

மீனம்:
          மீன் பிடித்து மிட்டல் ஆக நினைக்கும் மீன ராசி நண்பர்களே...உங்களில் சனி இடம் மாறுவதால் தங்களின் படகு தடுமாறும் வாய்ப்புள்ளது.குரு கட்டு மரத்தில் கரக்டா வந்தாலும்,குறுக்கே சனி மோட்டார் போட்டில் வந்து மோசம் செய்யும்.இருப்பினும் ராகு,கேது இருப்பதால் படகு கவுந்தாலும் ,எதிர் நீச்சல் போட்டு எஸ்கேப் ஆகிடலாம்.தினமும் நான்கு முறை வலைப்பாயுதே படிக்கவும் ஆனந்த விகடனில்.உகந்த நிறம் நீலம்.முத்துக்கு போகவேண்டும் அடி ஆழம்.

2 comments: