Friday, 26 October 2012

சிரிப்பு செய்திகள்

வணக்கம்.சிரிப்பு செய்திகள் வாசிப்பது உங்கள் வாரணாசி வாழவந்தான்.இன்றைக்கு சிக்கிய செய்திகள்.


  • பெட்ரோல் விலை உயர்வால் ஈயம் பித்தாளையில் அதிகரிக்கும் அந்நிய முதலீடு
  • விலைவாசி உயர்வை கண்டித்து சாகும் வரை உண்ணும்விரதம் - ரவுசு ராமசாமி
  • கொசுவை ஒழிக்க கொசக்சி பசப்புகழ் - தமிழ்நாடு கொசு ஒழிப்பு வாரியம் அறிவிப்பு 
  • மின்சார வெட்டை உயர்த்த கோரி திருப்பூரில் திருடர்கள் சாலை மறியல்
  • குதிரை லாடத்தின் தலைமை பொறுப்பு ஜல்சானந்தவுக்கே - ஜகா வாங்கும் ஜாங்கிரி நாதர் 
  • ஒரு கொசுவின் கொலைவெறி - நான் கொசு:சொல்கிறார் ராஜகுஜ்லி 
  • கிட்டிபுல்லில் கின்னஸ் சாதனை செய்வேன் - துடிக்கிறார் கிட்டிபுல் கிச்சா

இனி தொடர்வது சுரிவான செய்திகள்

உலக செய்திகள்


ஈயம் பித்தாளையில் அந்நிய முதலீடு:
             பெருகி வரும் பெட்ரோல் விலையால் ஈயம் பித்தாளை இமாலய வளர்ச்சி பெற்றுள்ளது.சந்தைக்கு வந்த கார் முதல் சந்துல நிற்கும் பைக் வரை அனைத்தும் காயலான் கடைக்கு படையெடுக்கிறது.ஆகையால் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை பழைய ஈயம் பித்தாளை மேல் விழுந்துள்ளது.ஆகையால் அந்நிய முதலீடும் அதிகரித்துள்ளது.

சாகும் வரை உண்ணும்விரதம்:
             உயர்ந்துகொண்டே வரும் விலைவாசி பிரச்சனையால் பிடித்த உணவை ஒரு பிடி பிடிக்க முடியவில்லை.ஆகையால் தலைமை செயலகத்தின் முன் சாகும்வரை உண்ணும்விரதம் இருக்க போவதாக போராட்டத்தில் குதித்துள்ளார் ரவுசு ராமசாமி.இந்த போராட்டத்திற்கு எதிர் வீட்டுக்காரர் முதல் எதிர் கட்சிகாரர் வரை அணைத்து மக்களும் ஒன்று கூடி இரவு பகல் பாராமல் அயராது முயன்ற வரை தங்கள் ஆதரவை தந்து ஆசையை அடக்குகின்றனர்.


தமிழக செய்திகள்


கொசுவுக்கு கொசக்சி:
            "இந்த கொசு தொல்லை தாங்கமுடிலடா..எங்க போனாலும் கடிக்குது..மருந்தடிச்சு கொல்லுங்கடா" என கதறும் மக்களை கொசுவிடம் இருந்து காப்பாற்ற வருகிறார் கொசக்சி பசபுகழ்.இவர் கொசுமுட்டையில் ஆம்லெட் போட்டு உலக கவனத்தை தன பக்கம் திருப்பியவர்.ஜப்பான்,சீனா போன்ற நாடுகளே தேடும் இவரால் மட்டுமே கொசுவை ஒழிக்க முடியும் என்று தமிழக கொசு ஒழிப்பு வாரியம் கருதி கேட்டு கொண்டமையால் அவர் கொசு ஒழிக்க வருகிறார்.

மின்சாரவெட்டை உயர்த்தக்கோரி சாலை மறியல்:
             தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் தங்கள் தொழில் வளமும் வாழ்வாதாரமும் பெரும் அளவில் உயர்ந்துள்ளதாக கருதும் தமிழக திருடர் நல சங்கம்,மின்வெட்டை குறைக்கும் தமிழக அரசின் திட்டத்தை தீயை வைக்குமாறும்,மேலும் மின்வெட்டை பெருக்கி எங்கள் வாழ்வை செழிக்க வைக்க வேண்டுமாறு கூறி சாலை மறியல் செய்தனர்.இதற்க்கு வேலூர்,பாளையங்கோட்டை,புழல் சிறைச்சாலை கைதிகளும் ஆதரவளித்து உள் இருப்பு போராட்டம் செய்தனர்.

குதிரை லாடம் ஜல்சானந்தாவிர்க்கே:
             குதிரை லாடத்தின் தலைமை பொறுப்பிற்கு ஜல்சானந்தாவை நியமித்த  ஜாங்கிரி நாதர்,அதற்க்கு தான் பணம் வாங்கவில்லை என்றும்.ஒன்லி செக் அண்ட் DD மட்டுமே வாங்குவதாவும் கூறினார்.மேலும்,எந்த குதிரையையும் கும்பகர்ணம் அடிக்க வைக்கும் பிக்காளித்தனம் அகில உலகத்திலேயே ஜல்சானந்தாவிர்க்கு மட்டுமே உள்ளதாவும்.ஆகையால் தான் யாம் அவரை குதிரை லாடத்தின் தலைவராய் நியமித்ததாக கூறினார்.


சினிமா செய்திகள் 

   கொசுவின் கொலவெறி: 
                தான் வாங்கி வாய்த்த ஜூஸை குடித்தும்,அதை தட்டிகேட்ட தன்னை ஜூஸாக பிழிந்தும் சாகடித்த வில்லன் வினு சக்ரவர்த்தியை எப்படி கதாநாயகன் லொள்ளு மனோகர் கொசுவாக வந்து கொன்னு போடுகிறார் என்பதே "நான் கொசு" படத்தின் கதை என்கிறார் இயக்குனர் ராஜகுஜ்லி.பெரும் பொருட்செலவில் கூவம் நதிக்கரையில் எடுக்கப்பட்ட டுயட்டும்,கண்ணம்மாபேட்டை  சுடுகாட்டில் எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ் சண்டை காட்சியும் இப்படத்தின் ஹைலைட் என்றும் கூறினார்.

விளையாட்டு செய்திகள் 


கிட்டிபுல்லில் கின்னஸ்:
             தெருமுனையில் கிட்டிபுல் ஆடிவந்த தாம் பாரிமுனையில் நடைபெற்ற கிட்டிபுல் ஆட்டத்தில் வென்றதே தனக்கு திருப்புமுனையாக அமைந்ததாக கூறும் கிட்டிபுல் கிச்சா,கிட்டிபுல்லில் கின்னஸ் சாதனை செய்தே தீருவேன் என்ற துடிப்பில் பலர் மண்டையையும்,வீட்டு ஜன்னலையும் உடைத்து கடுப்பில் மாட்டி உள்ளார்.எல்லாருக்கும் ஏழரையாக இருக்கும் இவரை ஏர்வாடிக்கு அனுப்பமாறு கோரிக்கை வைத்துள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள்.


வணிக செய்திகள் 


வழக்கம் போல் விலைவாசியும்,அந்நிய முதலீடும் ஆப்பு வைத்ததால் வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்ப்பதோடு சென்றனர்.ஆகையால்,ஏற்கனவே கடுப்பில் இருந்த முகம்,நொந்த முகமாகி இறுதியில் இறங்குமுகமாய் ஆனது.

அந்நிய முதலீட்டை காட்டிலும் தங்க முதலீடு பெருகி வருவது "வராத மழைக்கும் விடாது குடை பிடிப்பது" போன்ற மக்களின் "விடாத வறுமையிலும் கெடாத நகையாசையை" காட்டுகிறது.இதனால் தங்கம் விலை 
தாறுமாறாக ஏறி கொண்டு இருக்கிறது.இதற்க்கு நேர்மாறாக இருக்கும் என கருதப்பட்ட வெள்ளி விலையும்,தடம் மாறாது தகதிமிதோம் ஆடுகிறது 

இத்துடன் இன்றைக்கு சிக்கிய செய்திகள் முடிவடைகிறது.நன்றி வணக்ஹம்.


No comments:

Post a Comment